தேங்காய் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்) மூலம் கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரையின் விலையை கிலோவுக்கு ரூ.200 ஆக உயர்த்தி, உடனடியாகக் கொள்முதலைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மழை நிச்சயமற்ற நிலை, சாகுபடிச் செலவு உயர்வு, சந்தை விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் தென்னை விவசாயிகள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழைப் பற்றாக்குறையால் முக்கிய தேங்காய் உற்பத்தி மாநிலங்களில் மகசூல் பாதிக்கப்படுவதுடன், 2027-ம் ஆண்டில் புதிய தேங்காய் வரத்தும் தாமதமாக வாய்ப்புள்ளதாகச் சங்கத்தின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் மதிப்பீட்டின்படி, கேரளத்தில் 70 சதவீதம் வரையிலும், தமிழ்நாட்டில் 60 சதவீதம் வரையிலும், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் 55 சதவீதம் வரையிலும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக, அரவை கொப்பரைக்கு கிலோ ரூ.120.27, பந்து கொப்பரை ரூ.125 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது போதுமானதல்ல என்பதால் அரவை கொப்பரைக்கான விலையை கிலோவுக்கு ரூ.200 ஆக உயர்த்த வேண்டும்.
விவசாயிகள் குறைந்த விலைக்கு கொப்பரையை விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், நாஃபெட் மூலம் உடனடியாகக் கொள்முதலைத் தொடங்க வேண்டும் என்றும், சமையல் எண்ணெய் இறக்குமதி வரிகள் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.